பிரிந்து போகும் திருமண பந்தங்களுக்கு..
ஆண், பெண் உறவு என்பது உலகில் மனித சமுதாயம் நிலைத்திருக்க பிரதான காரணியாக அமைகிறது. இதனால்தான் இறைவன் அனைத்தையும் ஜோடி ஜோடியாகப் படைத்தான் அத்தோடு ஆண்களை பெண்களுக்கு ஆடையாகவும் ஆக்கினோம் என்றும் கூறுகிறான்.
அதோடு யார் திருமணம் செய்கிறாரோ அவர் மார்க்கத்தில் அரைவாசியை பூர்த்தி செய்துவிட்டார் எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
இவ்வாறான சிறப்புக்களையும் தார்பரியங்களையும் கொண்டதாகவே இந்த திருமண பந்தம் காணப்படுகிறது. ஆனால் இன்று இந்நிலை மாறி குடும்ப உறவு என்பது கேளிக்கையாகிவிட்டது. சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் பிரிந்து செல்கிறார்கள் இதற்கான காரணம் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம் ஆனால் ஆண்கள் பெண்களை நிர்வகிப்பவர்கள் என்ற வகையில் அவர்களுக்கு செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றையே பெண்களும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள் இவற்றை ஆண்கள் நிறைவேற்றும்போது திருமணபந்தம் மனக்கசப்பின்றி சிறப்பாக தொடர்ந்து செல்லும்.
1. தான் மனைவியை விரும்புவதாக ஒவ்வொரு நாளும் கூறல்:
ஒவ்வொரு மனைவியும் தான் கணவனால் நேசிக்கப்படுகிறேனா என்பதை அறிந்து கொள்ளவே விரும்புவாள் எனவே இதனை கணவன் புரிந்து கொண்டு அவளை விரும்புவதாகக் கூறி அவளது மனதை ஆறுதல் படுத்தவேண்டும்.
2. புரிந்து கொள்ளலும், மன்னித்தலும்:
தவறு செய்யாதவர்கள் எவரும் இல்லை மனிதன் தவறு செய்யக்கூடியவன் என்ற ரீதியில் அவள் விடுகின்ற பிழைகளைச் சுட்டிக்காட்டி திருத்தவே முற்பட வேண்டும் ஏனெனில் மன்னித்தல் என்ற அம்சம் இல்லாவிட்டால் எந்த உறவும் நிலைத்திருக்க முடியாது.
3. நல்ல முறையில் பேசுதல்:
காலம் செல்லச் செல்ல குறைந்து போகும் அம்சமான கணவனுக்கும் மனைவிக்கும் இடையான பேச்சு தொடர்பை குறைந்து விடக்கூடாது. மாறாக அவர்களோடு உங்களது பிள்ளைகள், காலநிலை, வீட்டு விவகாரம் செலவினங்கள் பற்றி பேசுங்கள். பேச்சு தொடர்பு குறைகின்ற போது மணவாழ்க்கை சிக்கலில் முடிவடையும்.
4. மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் நேரம் செலவழித்தல்:
நீங்கள் செலவழிக்கின்ற நேரத்திலே மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் செலவழிக்கின்ற நேரமே அதிகம் நன்மைபயக்கக் கூடியது.
5. இல்லை என்று கூறுவதைவிட அதிகமாக ஆம் என்று கூறுதல்:
வழமையாக நீங்கள் எதிராக நடத்தலானது (Negative) அவர்களை உங்களை விட்டும் தூரமாக்கி விடக்கூடும் இல்லை என்று சொல்வதற்கு முன் இருமுறை சிந்தியுங்கள் நீங்கள் ஆம் என்று சொல்வதானது எந்தளவிற்கு உறவை பலப்படுத்துகிறது என்பதை நீங்கள் அறியும் போது நீங்களே ஆச்சரியமடைவீர்கள்.
6. பேச்சுக்களை செவிமடுத்தல்:
நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன என்ற வகையில் அவர்களின் உணர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள இடமளிக்க வேண்டும் உங்கள் மனைவியர் அவர்கள் கூறுகின்றவற்றை நீங்கள் காதுகளால் கேட்க வேண்டுமென எதிர்பார்ப்பதில்லை மாறாக இதயத்தால் செவிமடுக்க வேண்டும் என்றே எதிர்பார்ப்பர்.
7. அன்பு:
அவர்களோடு அன்பாக நடந்துகொள்ள வேண்டும் சில மணமக்கள் ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பதே சிறந்த திருமண உறவுக்கான பிரதான வழிமுறை என்பதை அறியாதிருக்கிறார்கள்.
8. வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளல்:
கணவனும் மனைவியும் சண்டையிட்டு பிரிந்து செல்வதற்கான பிரதான காரணம் வீட்டு வேலைகளை யார் செய்வது என்ற பிரச்சினையாகும் பிள்ளைகளை பராமரிப்பது என்பது பெண்கள் மீது மட்டும் திணிக்கப்பட்ட சுமையல்ல. அவள் அதை எதிர்ப்பார்க்காவிடினும் நீங்கள் அறிந்து உதவ வேண்டும்.
9. ஒருநாள் விடுமுறை அளித்தல்:
ஒரு மாதத்தில் பலமுறைகள் விடுமுறை அளியுங்கள் அதாவது அந்நாளில் அவள் வீட்டுக்கு பிள்ளைகளுக்கு உங்களுக்கு என்ன நடக்கிறது என்ற எந்தக் கவலையும் இன்றி ஓய்வாக இருக்க அனுமதியுங்கள் இவ்வாறான ஒருநாளை பெறுவதானாது அவர்களுக்கு உடல் ரீதியாகவும் உள ரீதியாவும் அவசியமானதாக அமைகிறது.
10. உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் உங்களுக்காக நீங்கள் கவனம் செலுத்தல்:
பல ஆண்கள் தங்களின் ஆரோக்கிய வாழ்வில் கவனமற்றவர்களாக இருக்கிறார்கள் இது வாழ்விற்கு சிறந்ததல்ல. ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். அது ஆரோக்கியமான உங்கள் குடும்ப வாழ்விற்கு அவசியமானதாகும்.